தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிசிடிவி கேமரா பொருத்திய வாகன மூலம் ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். 
தமிழகம்

தீபாவளி கூட்ட நெரிசலைக் கண்காணிக்க சிசிடிவி கேமிராவுடன் ரோந்து வாகனம்: தூத்துக்குடியில் எஸ்.பி. தொடங்கி வைத்தார்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிசிடிவி கேமரா பொருத்திய ரோந்து வாகன கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள், நடைபாதை துணி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைப் பறிப்பு, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்திய ரோந்து வாகன கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேமிரா பொருத்திய வாகன ரோந்தை எஸ்.பி., ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். 360 டிகிரி சுழலும் கேமிராக்கள் பொருத்தப்பட்ட 2 வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த ரோந்து வாகனங்கள் கூட்டம் அதிகமான இடங்களில் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்.

அதுபோல நகரில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளையும் எஸ்பி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர் ராஜாமணி, மக்கள் தொடர்பு அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT