போலிச் சான்றுகள் மூலம் புதுச்சேரி மாணவர்களின் ஜிப்மர் மருத்துவ இடங்களுக்கான பட்டியலில் ஆந்திரம், தெலங்கானாவைச் சேர்ந்த 31 பேர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலரும் ஆட்சியருமான அருண் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
புதுச்சேரியிலுள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி படிப்புகளைப் படிக்கலாம். ஜிப்மரில் புதுச்சேரிக்கு 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீட்டுக்கு 10 சதவீதம் வழங்குவதையொட்டி இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதுவை ஜிப்மர் கல்லூரியில் தற்போது 37 இடங்கள் அதிகரித்து 187 இடங்களாக உயர்ந்துள்ளன. காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் தற்போது 12 இடங்கள் அதிகரித்து 62 இடங்களாக உயர்ந்துள்ளன.
புதுவை மாணவர்களுக்கு இதுவரை 54 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்து வந்த நிலையில் சீட் அதிகரித்ததன் மூலம் இனிமேல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 64 இடங்கள் கிடைக்கும். கடந்த கல்வியாண்டு வரை ஜிப்மர் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தியது. நடப்புக் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை, நீட் கலந்தாய்வு முறையில் நடத்தப்படுகிறது. தற்போது நீட் பட்டியல் வெளியானவுடன் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்பட்டதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 31 பேர் போலிச் சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்துப் புதுச்சேரி பெற்றோர் மாணவர் நலச்சங்கத் தலைவர் பாலா கூறுகையில், "ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 31 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தோர் என விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் பெயர் ஆந்திரா, தெலங்கானா மருத்துவப் பட்டியலிலும் உள்ளது. அதனால் இதில் தவறு நடந்துள்ளதாகப் புகார் தந்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
இதுபற்றிப் புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி கூறுகையில், "புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளியூர் மாணவர்களின் பெயர் வருவதற்குப் போலிச் சான்றிதழ்களே காரணம். இவர்களின் பெயர்கள் புதுச்சேரி மாநிலப் பட்டியலில் இல்லை. இது ஆண்டுதோறும் நடக்கிறது. இதனால் புதுச்சேரி மாணவ, மாணவிகளின் வாய்ப்பு பறிபோகிறது. இதைத் தடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்று குறிப்பிட்டார்.
முதல்வர் நாராயணசாமியிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு, "என்னிடம் புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுமையாக புதுச்சேரி மாணவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். வெளிமாநிலத்தவர் போலிச் சான்றிதழ் மூலம் வந்தால் அவர்களுக்கு இடம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
ராகேஷ் அகர்வாலும் அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த இடம் கொடுக்கப்படும். இல்லையென்றால் கண்டிப்பாக மறுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மத்திய மருத்துவக் கழகத்துக்கும் இதுகுறித்துக் கடிதம் எழுத உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதுபற்றிச் சமூக ஆர்வலர்கள் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் மாநில ஒதுக்கீட்டு இடங்களை அபகரிக்க ஆண்டுதோறும் மருத்துவத் துறையில் மோசடி நடக்கிறது. வெளிமாநிலங்களைச் சேர்ந்தோர் இங்கு குடியிருந்ததற்கான போலியான சான்றுகளைச் சிலரின் துணையுடன் பெற்று, மருத்துவ இடங்களைப் பறிக்கின்றனர். இது தொடர்பான புகாரில் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் சிலர் மீது விசாரணையும் நடந்தது. இதில் கண்டிப்பான அணுகுமுறையை அரசு உயர்மட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
இப்புகார் தொடர்பாக முதல்வர் உத்தரவுப்படி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் விசாரணை மேற்கொண்டுள்ளார். அத்துடன் ஜிப்மர் தரப்பும் இதில் முக்கியக் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மரில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்று தொடங்கியுள்ளது.
ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு, "சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு வரும் புதுச்சேரி ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் தற்போதைய இருப்பிடச் சான்று, அவரது பெற்றோர் பணிபுரியும் சான்றுகளைக் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். இப்பணி கடந்த ஆண்டைப் போலவே நடக்கும்" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.