பொள்ளாச்சி: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தைக்கு மரபணு சிகிச்சை அளிக்க, ரூ.16 கோடி செலவாகும் என்பதால் அக்குழந்தையின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி புளியம்பட்டி மாதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு ஆருத்ரா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தை அரிய வகை மரபணு நோயான முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு உயிர்காக்கும் சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு அவரது பெற்றோர் அரசின் உதவியை கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறியதாவது: எங்களது 6 மாத பெண் குழந்தை ஆருத்ராவுக்கு திடீரென கால் செயல் இழப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அரிய வகை மரபணு நோயான முது கெலும்பு தசை சிதைவு நோய் என தெரியவந்தது. இது முதுகு தண்டில் உள்ள இயக்க நரம்பு செல்களை பாதித்து, குழந்தையின் தசைகளை படிப்படியாக பலவீனமடைய செய்யும். உடல் இயக்கதிறனும் குறையும்.
இந்த நோய் படிப்படியாக தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். பிஞ்சு வயதிலேயே எங்கள் குழந்தை கொடிய நோயுடன் போராடி வருவது மிகுந்த வேதனையையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில் மரபணு சிசிக்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தை ஆருத்ரா பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கான செலவு ரூ.16 கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எங்களால் ஏற்பாடு செய்ய முடியாது. எனவே அரசின் உதவியை கேட்டுள்ளோம். இதுகுறித்து அரசின்கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.