தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, திருச்சி சிவா, அன்புமணி, எல்.கே.சுதீஷ் ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.படங்கள்: பிடிஐ
சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தம்பிதுரை, திருச்சி சிவா, அன்புமணி,எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட 6 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என்.கனிமொழி சோமு, மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைய இருந்தது. அந்த 6 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 16-ம் தேதி நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவை சேர்ந்த எல்.கே.சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் மாநிலங்களவை எம்.பி.க்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் பதவியேற்றபோது கட்சியின் நிறுவனரான விஜயகாந்த் படத்தை எம்.பிக்களை நோக்கி காண்பித்தார். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ் ஆகிய மூவரும் முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.