ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய 6 அடி நீள கத்தி மீன்.
ராமேசுவரம்: பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று விசைப்படகு மீனவர் வலையில் 6 அடி நீளராட்சத கத்தி மீன் சிக்கியது. ராமேசுவரம் அருகே பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்த பாம்பன் அருளானந்தம் என்ற மீனவரின் வலையில் 6 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட ராட்சத கத்தி மீன் ஒன்று சிக்கியது.
இந்த மீன் கிலோ ரூ.250 வீதம் ரூ.6,250-க்கு விலைபோனது. இதுகுறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது: கடல்வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக் கூடியவை இந்த கத்தி மீன்கள். மணிக்கு சராசரியாக 100 கி.மீ. வரையிலும் நீந்தும் திறன் கொண்டவை.
மயிலின் தோகை போன்று இந்த மீனின் துடுப்புகள் இருப்பதால், பாம்பன் மீனவர்கள் இதை மயில் மீன் என்றும் அழைக்கின்றனர். இந்தியப் பெருங்கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும் கத்தி மீன்கள், மன்னார் வளைகுடாப் பகுதிக்கு இனப்பெருக்கத்துக்காக வந்திருக்கலாம்.
இந்த மீனின் தாடை வாள் போன்று இருப்பதால், அதைப் பயன்படுத்தி மற்ற மீன்களை தனியாகவே வேட்டையாடும். கடலின் மேற்பரப்பில் தாவி தாவி நீந்தும்போது, படகில் உள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.
2 லட்சம் கிலோமீட்டர்... ஒரு கத்தி மீன் தனது வாழ்நாளில் சராசரியாக 2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் நீந்தி, வெவ்வேறு கடல் பகுதிக்கு இடமாறிக்கொண்டே இருக்கும். இதனால், இதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து இதைப் பிடிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.