தமிழகம்

மாநகர பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம்: 3 மாதங்களில் ரூ.26 லட்சம் அபராதம் வசூல்

செய்திப்பிரிவு

மாநகர பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 26,849 பேரிடம் ரூ.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களை கண்காணிக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மாதந்தோறும் சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, புரசைவாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், தி.நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, கிண்டி உள்ளிட்ட முக்கிய இடங்களில் திடீர் பரிசோதனை நடத்தி வருகின்றன.

கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட சோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 9,459 பேரிடம் ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆகஸ்டில் 9,168 பேரிடம் ரூ.8 லட்சத்து 98 ஆயிரத்து 150-ம், செப்டம்பரில் 8,222 பேரிடம் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 850-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 26,849 பேரிடம் மொத்தம் ரூ.26 லட்சத்து 35 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் மொத்தம் 600 அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT