கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்கள், தைப்பூசம் போன்ற நாட்களில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும். மருதமலை கடைவீதியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதுதவிர, அங்கு 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இருப்பினும், மக்களின் வசதிக்காக மருதமலை அடிவாரத்தில் ஏ.டி.எம். வசதி இல்லை. எனவே, ஏ.டி.எம். வசதியை ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பக்தர்கள் சிலர் கூறும்போது, “மருதமலையில் ஏ.டி.எம். இல்லாததால், அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவோர் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்குதான் வர வேண்டியுள்ளது. எனவே, மருதமலையில் ஏ.டி.எம். மையம் அமைத்தால் பலரும் பயன்பெறுவார்கள்" என்றனர்.
கோவை மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கூறும்போது, "மருதமலைக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு வங்கிக் கிளை மூலமாக, தேவை கருதி ஏ.டி.எம். வசதியை ஏற்படுத்தலாம். சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
எனவே, அருகே உள்ள வங்கிக் கிளைகளில் பொதுமக்கள், வியாபாரிகள் சார்பில் எந்த அளவுக்கு தேவை உள்ளது என்பதை குறிப்பிட்டு, ஏ.டி.எம். மையத்தை அமைத்து தரக் கோரி மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மருதமலை கோயில் துணை ஆணையர் விமலா கூறும்போது,“ஏ.டி.எம். அமைக்க ஏதேனும் வங்கிகள் முன்வந்தால், அவர்களுக்கு தகுந்த இடத்தை ஒதுக்கித் தர தயாராக உள்ளோம்" என்றார்.