சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘நிர்பயா'திட்டத்தின்கீழ் ரூ.95 கோடியில், நவீன கண்காணிப்பு கேமராக்கள், அபாய நிலையில் ஒரு பெண் இருந்தால் அதை காவல் துறைக்கு தெரிவிப்பதற்கான பொத்தான்கள் அடங்கிய 1,605 ஸ்மார்ட் கம்பங்களை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுடெல்லியில் கடந்த 2012-ம்ஆண்டு பாலியல் வன்கொடுமையால் மருத்துவ மாணவி உயிர் இழந்தார். அதைத் தொடர்ந்து, புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆமதாபாத், லக்னோ ஆகிய8 முக்கிய மாநகரங்களில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 2013-ம்ஆண்டு, ‘நிர்பயா’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. அதன்கீழ் சென்னையில் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக ரூ.425 கோடியில் 13 வகையான திட்டங்களை மாநகராட்சி வகுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யநவீன கண்காணிப்பு கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட உள்ளன.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி சார்பில் ‘நிர்பயா' நிதியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக காவல் துறை மூலமாக ரூ.7கோடியே 50 லட்சத்தில் ‘அம்மா ரோந்து வாகனம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ரூ.8 கோடியில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான நவீன இ-கழிப்பறைகளைக் கட்டவும், ரூ.40 கோடியே 40 லட்சத்தில், தெருவிளக்குகள் பழுதானால் தன்னிச்சையாகக் கண்டறிந்து தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பெண்களின் பாதுகாப்புக்காக ஸ்மார்ட் கம்பங்களை நிறுவ மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.95 கோடியே 65 லட்சத்தில் மாநகரம் முழுவதும் 1,605 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட உள்ளன.
அதிகபட்சமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் தலா 200-க்கும் மேற்பட்ட கம்பங்கள் நிறுவப்பட உள்ளன. இவற்றில் நவீன கேமராக்கள், அபாய நிலையில் ஒரு பெண் இருந்தால், அதை காவல்துறைக்கு தெரிவிக்கும் பொத்தான், பிரகாசமாக எரியும் எல்இடி மின் விளக்குகள் ஆகியவை இடம்பெறும்.
பெண் ஒருவர் தான் ஆபத்தில் இருப்பதை இந்த கம்பத்தில் உள்ள பொத்தானை அழுத்தி தெரிவித்தால், உடனே அந்த கம்பத்தில் உள்ள கேமரா 180 டிகிரி கோணத்தில் சுழன்று, சுழன்று படம் எடுக்கும். மாநகராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் தெரிவிக்கும். அது காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும், காவல் ரோந்து வாகனங்களுக்கும் தகவல் தெரிவிக்கும்.
குறுகிய நேரத்தில் தொடர்புடைய இடத்துக்கு போலீஸார் வந்துவிட முடியும். கேமரா எடுத்த படங்களின் உதவியுடனும், குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.