புதுக்கோட்டையில் உள்ள சர்வஜித் அறக்கட்டளை அமைப்பினர் கடந்த 8 ஆண்டுகளாக கைவிடப்பட்டோ ருக்கு இறுதிச் சடங்கு செய்து வருவதைக் கடமையாகக் கொண்டுள்ளனர்.
பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தங்களது பிள்ளைகளால் வீடுகளைவிட்டு வெளி யேற்றப்பட்ட நிலையில் பெற்றோ ரும், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உறவுகளால் புறக்கணிக்கப்படுவோரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்து ஆங்காங்கே சுற்றித் திரிந்து காலத்தைக் கழிப்போரும் தங்களின் இறுதிக் காலத்தில் யாருடைய அரவணைப்பும் இல்லாமல் தெரு வோரங்களிலும், பொது இடங் களிலும் இறந்து விடுகின்றனர்.
இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் இறந்துகிடப்போரின் உடல் களை காவல் துறையினர் மீட்டு விசாரிப்பார்கள். இறந்தவர் அநாதை என உறுதி செய்த பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.
இவ்வாறு புதுக்கோட்டையில் கைவிடப்பட்ட நிலையில் இறப்போரின் உடலை மீட்டு சர்வஜித் மக்கள் சேவை என்ற அறக்கட் டளையினர் இறுதிச் சடங்கு செய்வதை தங்களின் கடமையாகச் செய்துவருகின்றனர். இதுவரை 188 உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி புதுக்கோட்டை மருத்துவர் எஸ்.ராமதாஸ் கூறியதாவது: குடும்பத்தினரின் ஏதாவது ஒரு நெருக்கடியில் வீட்டைவிட்டு வெளியேறி தெருவோரங்களில் தங்கி வழிப்போக்கர்களின் உதவி யால் வாழ்வைக் கழிப்பவர்கள் ஏராளம்.
இப்படி கைவிடப்பட்ட நிலை யில், வாழ்நாளைக் கடத்தி, உடல் நலிவுற்று இறந்து விடுபவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்து, அவர் களுக்கு மரியாதை செய்ய வேண் டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு கடந்த 2007-ல் சமூக ஆர்வலர்களைக் கொண்டு சர்வஜித் மக்கள் சேவை அறக்கட்டளையைத் தொடங்கினோம்.
பொது இடங்களில் இறந்து கிடப்பவர்களைப் பற்றி காவல் துறையினர் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். காவல் நிலை யத்தில் அது அநாதை சடலம் என வழக்கு பதிவு செய்தால் மட்டுமே நாங்கள் அந்த உடலை மீட்போம். அதன்படி இதுவரை 188 உடல்களை எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளோம். இறுதிச் சடங்கு செய்த பின்னர் சிலர், ஏதோ காரணங்களுக்காக, இறந்தவர் எங்களது உறவினர், அவரது உடல் வேண்டும் என்று கேட்பார்கள். அதெல்லாம் எங் களுக்குத் தெரியாது, காவல் நிலையத்தை அணுகுங்கள் என்று கூறிவிடுவோம்.
இறந்தவர்களில் தமிழ் தெரியா தோர், நோய், நொடியால் பாதிக் கப்பட்டோர் அதிகம். எங்களது சேவையைப் பாராட்டி பலர் உதவி யும் செய்துள்ளனர்.
பலர் அறக்கட்டளையில் இணைந்து பணியாற்றியும் வருகின்றனர். ஆதரவற்றோர் இருக்கும் வரை எங்களின் பணி தொடரும் என்றார் எஸ்.ராமதாஸ்.