தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தி.நகர், புறநகர் துணிக் கடைகளில் குவிந்த மக்கள்

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தியாகராய நகர் மற்றும் புறநகர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடைகளை வாங்க லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் நேற்று குவிந்தனர்.

இந்த ஆண்டு தீபாவளி, வரும்14-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாதத்தின் 2-வது வாரத்திலேயே தீபாவளி வருகிறது. மேலும் அரசுமற்றும் தனியார் நிறுவனங்களில் தற்போது போனஸும் வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடைகளை வாங்க லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

சென்னையில் தியாகராய நகர் பகுதியில் துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. ரங்கநாதன் தெருவில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. மேலும் பாண்டிபஜார், வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் சாலை ஆகியவை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

அங்கு பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை நிறுவியும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்து வந்தனர். அப்பகுதிகளில் காவல் துறை மற்றும்மாநகராட்சி சார்பில், முகக் கவசம்அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனாதொற்று தடுப்பு வழிமுறைகள் குறித்தும், அவற்றை பின்பற்றுமாறும் ஒலிப்பெருக்கி வழியாக அறிவுறுத்தப்பட்டன. விழிப்புணர்வு பதாகைகளும் அப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.

இப்பகுதிகளுக்கு வழக்கமாக மின்சார ரயில்களில் மக்கள் வருவர்.தற்போது மின்சார ரயில்கள் இல்லாததால், அனைவரும் பேருந்தில் வந்து இறங்கினர். அதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தியாகராய நகருக்கு சிறப்புபேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வட சென்னையில் பழைய வண்ணாரப் பேட்டை, பெரம்பூர் -மாதவரம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல துணிக் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் துணிகளை வாங்கிச் சென்றனர்.

மேலும், அடையாறு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, புறநகர் பகுதிகளான வேளச்சேரி, குரோம்பேட்டை, தாம்பரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளிலும் நேற்று துணிகளை வாங்க மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் நேற்று சென்னை, புறநகர் பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது.

SCROLL FOR NEXT