பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரில் வசிக்கிறார். இவரது மனைவி சுமா. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் சுமாவிடம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர், ‘‘எங்களுக்கு ரூ.20 லட்சம் தர வேண்டும். இல்லையென்tறால் உன் கணவரை கடத்திவிடுவோtம்’’ என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டனர்.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதே நபர், ‘‘ரூ.10 லட்சத்தை உடனடியாக நாங்கள் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து தர வேண்டும்’’ என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சுமா புகார் கொடுத்தார். மிரட்டல் விடுத்த நபர்க ளைப் பிடிக்க வளசரவாக்கம் உதவி கமிஷனர் ஜான் அருமைராஜ், இன்ஸ் பெக்டர் சேட்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, திரிசூலம் அருகில் பதுங்கியிருந்த அருணாச்சல பாண்டியன் (25), முத்துக்கிருஷ்ணன் (32), திருமலை (32) ஆகியோரை கைது செய்தனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் அப்பாவிடம் கார் டிரைவராக திருமலை வேலை பார்த்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து, பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். புகார் கொடுத்த சில மணி நேரத்தில் மிரட்டல் நபர்களை கைது செய்த தனிப்படையினரை சென்னை போலீஸ் கமிஷ்னர் பாராட்டினார்.