அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார்.
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக முதன்முதலில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் அது கமலா ஹாரிஸ்தான். இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹாரிஸ்.
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 08) தன் ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெற்றியின் மூலம் கமலா ஹாரிஸ், தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.