நடிகை மனோரமா மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் கே.ரோசய்யா:
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த, புகழ்பெற்ற நடிகையும் பாடகியுமான மனோரமாவின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி யும், மன வேதனையும் அடைந்தேன்.
அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக் கிறது. அவரது ஆன்மா சாந்தி யடைய இறைவனை பிரார்த்திக் கிறேன்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
மேடை நாடக நடிகையாக ஆரம்பித்து ஆயிரத் துக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் மனோரமா. பழகுவதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் இனிமை யானவர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:
திரைப்படத்தில் வசனங்களை அழகான தூய தமிழில் உச்சரிப்பதில் மனோரமாவுக்கு இணை அவர்தான். நாகேஷ், மனோரமா இணைந்து நகைச் சுவை நடிப்பின் மூலம் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதைப் போல இனி எவராலும் இயலாது. காமராஜர் மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தவர் மனோரமா.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன்:
நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. சிறந்த நடிப்பின் மூலம், மற்ற நடிகர், நடிகைகளுக்கு ஒரு ஆசிரியராக திகழ்பவர் மனோரமா. அவரது இழப்பு, தமிழ் திரை உலகுக்கும், தமிழக மக்களுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
தமிழ்த் திரையுலகின் வரலாற்றை நடிகை மனோரமாவை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. தமிழ்த் திரையுலகில் சிவாஜி, நாகேஷ் என நான் ரசித்த ஒருசில கலைஞர்களில் மனோரமாவும் ஒருவர். தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் அவருக்கு என்றென்றும் தனி இடம் உண்டு என்பதுதான் அவரது திறமைக்கு அடையாளம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:
திரைப்பட உலகில் மனோரமா ஒப்பாரில்லாத தனித்தன்மை வாய்ந்த நடிகை. அவர் ஒரு சகாப்தம். எளிய குடும்பத்தில் பிறந்து கடும் உழைப்பால் அரை நூற்றாண்டு காலம் திரைப் படத்துறையை ஆட்சிசெய்த ஆச்சி அவர்.
சமக தலைவர் ஆர்.சரத்குமார்:
நான்கு தலைமுறைகளாக திரையுலகில் முத்திரை பதித்தவர் மனோரமா. நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி கணேசன் என்பதைப் போல நடிகைகளுள் நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்தவர். அவர் மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் மூலமாக என்றும் வாழ்வார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
நாடகம், சின்னத்திரை, வெள்ளித்திரைகளில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். நடிப்பு, நகைச்சுவை, பாடல், நடனம் என பன்முகத் திறமை கொண்டவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பு.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் ந.சேதுராமன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் மனோரமா மறை வுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.