மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, ரூ.5.50 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கு கட்டிடப் பணிகளை ஆட்சியர் பொன்னையா நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பின்னர், ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இக்கட்டிட கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 10 சட்டப்பேரவை தொகுதிகளின் 9,320 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,040 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 4,924 வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவிபிஏடி கருவிகள் என மொத்தம் 19,284 இயந்திரங்கள் வைக்கப்படும்.
மேலும், இயந்திரங்களை கொண்டு செல்ல மின்தூக்கி, காவலர் தங்கும் அறை, முதல் மற்றும் இருப்பு அறை என அனைத்து வசதிகளுடன் இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பொதுப்பணித் துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) தர், உதவி செயற்பொறியாளர் புண்ணியகோட்டி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.