அத்தியாவசிய பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கரோனா ஊரடங்கால் வழக்கமான பயணிகள் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே ஊழியர்கள், வங்கிகள், காப்பீடு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் தனியார் ஊழியர்களுக்கு வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய தொடர்புடைய அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகார கடிதம் மற்றும் அலுவலக அடையாள அட்டையை காண்பிடித்து டிக்கெட் வாங்கி கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் தினமும் 110-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஞாயிறுகளில் 5 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணிக்குச் செல்லும் பணியாளர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் அந்தந்த நிறுவனத்தின் கடிதங்களை கொண்டே மின்சார சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. இதுவரையில், ஞாயிறுகளில் மிகவும் குறைவாகவே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, ஞாயிறுகளிலும் பணிக்குச் செல்லும் ஊழியர்களைக் கருத்தில் கொண்டு கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஞாயிறுகளிலும் 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன’’ என்றனர்.