தமிழகம்

பாஜக வேல் யாத்திரையை தடை செய்தது கண்டனத்துக்குரியது - அர்ஜுன் சம்பத் கருத்து

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரியில் இந்து மக்கள் கட்சியின் தமிழக தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று வேல் வழிபாடு நடத்தினார். இதற்காக, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 27 அடி உயர வேல் அருகே சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து அர்ஜுன் சம்பத் 27 அடி உயர வேலுக்கு பூஜைகள் செய்து பாலாபிஷேகம் செய்தார். பின்னர், சிறுவாபுரி முருகன் கோயிலில் வேலுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து லஞ்சம், ஊழலற்ற ஆன்மிக அரசியல் வெற்றி பெற வேண்டிஇந்த வேல் வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் வரும் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆன்மிக அரசியலில் வெற்றி பெற வேண்டி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேல்வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கும் தமிழகஅரசு, பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையை தடை செய்தது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, கண்டனத்துக்குரியது.

SCROLL FOR NEXT