காட்டுமன்னார்கோவிலில் கூலித்தொழிலாளர்கள், மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.
காட்டுமன்னார்கோவில் பகுதி அதிக அளவிலான கிராமங்களை கொண்ட பகுதியாகும். இங்கு பெரும்பாலானோர் கூலித்தொழிலாளிகள், கொத்தனார் மற்றும் சித்தாள் வேலை செய்பவர்கள். காட்டுமன்னார்கோவிலில் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறது.
இந்தக் கும்பல் நெய்வேலி, நாகை, தஞ்சை, கும்பகோணம், அரியலூர் பகுதிகளில் இருந்து கஞ்சாவை வரவழைக்கின்றனர் செல்போன் மூலம், கஞ்சா வேண்டும் என்று தகவல் தெரிவித்த சில மணி நேரங்களில் பைக் ஆசாமிகள் மூலம் கஞ்சா பொட்டலங்கள் காட்டுமன்னார்கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.
கூலித் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை குறி வைத்து அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. சந்தைதோப்பு, திரவுபதி அம்மன் கோயில் தெரு, பெரியகுளம் பகுதி, ஆஞ்சநேயர் கோயில் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் செல்போன் மூலம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை விற்பனை நடைபெறுகிறது. இதற்காக குறிப்பிட்ட கோட்வேட் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
"கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.