தமிழகம்

மதுரை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தொகுதியை பெற திமுக நிர்வாகிகள் கடும் முயற்சி

செய்திப்பிரிவு

சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட்டியிட தொகுதிகளை உறுதி செய்வதில் மாவட்ட திமுக நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

2016 சட்டப் பேரவை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 8 தொகு திகளில் திமுக போட்டியிட்டது. மதுரை கிழக்கு-பி.மூர்த்தி, மேலூர்-ரகுபதி, மதுரை மத்தி-பழனிவேல் தியாகராஜன், மேற்கு-கோ.தளபதி, தெற்கு-பாலச்சந்திரன், திருப்பரங்குன்றம்-எம்.மணி மாறன், உசிலம்பட்டி-இளமகிழன், சோழவந்தான்-பவானி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மட்டும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் போட்டியிட்ட மதுரை வடக்கு, திருமங்கலம் தொகுதிகளில் தோல்வியடைந்தது. பின்னர் நடந்த திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் பா.சரவணன் வெற்றி பெற்றார்.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுக நிர்வாகிகள் தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. உசிலம் பட்டி பா.பிளாக் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. ஒரு தொகுதி காங்கிரசுக்கு செல்லும். மதிமுக ஒரு தொகுதியைப் பெறும் வாய்ப்புள்ளது. மதுரை தெற்கு, திருமங்கலம் ஆகிய தொகுதிகள் இப்பட்டியலில் இடம் பெற வாய்ப் புள்ளது.

மீதம் உள்ள 7 தொகுதிகளில் சோழவந்தான் தனித் தொகுதிக்கு மட்டுமே போட்டி குறைவு. மீதம் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட இப்போதே கடும் முயற்சிகளில் கட்சி நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

பி.மூர்த்தி, பழனிவேல் தியா கராஜன் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமே உறுதியாகத் தெரிகிறது. மேலூரை திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரகுபதி மீண்டும் கேட்கிறார்.

உசிலம்பட்டியை கூட்டணிக்கு ஒதுக்கினால் திருப்பரங்குன்றத்தை தனக்கு ஒதுக்குமாறு தலைமைச் செயற்குழு உறுப்பினர் இள மகிழன் கேட்கிறார். கோ.தள பதி மதுரை மேற்கு அல்லது மதுரை வடக்குத் தொகுதி யைக் கேட்கிறார். திருமங்கலம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் திருப்பரங்குன்றத்தை கேட்கிறார் எம்.மணிமாறன். பா.சரவணன் மதுரை வடக்கு அல்லது திருப் பரங்குன்றத்தை கேட்கிறார்.

கூட்டணிக்கு 3, சோழவந்தான் தொகுதிகளைத் தவிர்த்து உள்ள 6 தொகுதிகளில் தற்போது எம்எல்ஏ.க்களாக உள்ள 3 பேரும், கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த ரகுபதி, இளமகிழன், தளபதி ஆகியோரும் போட்டியிட கட்சித் தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் எனப் பல்வேறு தரப்பிலும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவர்களைத் தவிர முன்னாள் எம்எல்ஏ. வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தை வேலு, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மகன் சேது, பகுதிச் செயலாளர் அக்ரி.கணேசன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜெயராமன் உட்பட பலரும் போட்டியில் உள்ளனர். மதுரை வடக்குத் தொகுதிக்குத்தான் பலத்த போட்டி உள்ளது.

SCROLL FOR NEXT