தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரம், ராயலசீமா மற்றும் கேரளம், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வரும் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்று முதல் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட் டங்களில் லேசானது முதல் மித மானது வரை மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை படிப்படியாக உயர்ந்து அக்டோபர் 28, 29 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிக கன மழையும் உள் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.
வடகிழக்கு பருவமழையின் போது சராசரியாக 44 செ.மீ. மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் வழக்கத்தை விட 12 சதவீதம் அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 13 செ.மீ., ஆயக்குடியில் 8 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 7 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 6 செ.மீ., கன்னியா குமரி மாவட்டம் குழித்துறை, திரு நெல்வேலி மாவட்டம் பாபநாசம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை நேற்று முன் தினம் பெய்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.