மருத்துவப் பரிசோதனைக்காக பேரறிவாளன் விழுப்புரம் அழைத்து வரப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனைக் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரறிவாளனை 30 நாட்களுக்குப் பரோலில் விடுவிக்க அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
பேரறிவாளனின் பரோல் காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுதால் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று (நவ. 6) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று (நவ. 07) காலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தாயார் அற்புதம் அம்மாளுடன் பேரறிவாளன் விழுப்புரத்திற்குப் புறப்பட்டார்.
நண்பகல் 12 மணிக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விழுப்புரம் வந்த பேரறிவாளனுக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் வெப்பப் பரிசோதனை, வருகைப் பதிவு செய்யப்பட்டு மருத்துவர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்குச் சிறுநீரகம், தோல், நுரையீரல், வயிறு பிரச்சினைகளுக்காகப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.