தேமுதிக தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கான தடை குறித்து அரசு முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி முதல் வாரத்துக்குள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி தெளிவான முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். தற்போது விஜயகாந்தின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அவரை நீங்கள் பார்க்கலாம் என்றார்.
மதுரை டிஆர். நகரில் மாவட்ட அலுவலகத்தை பிரேமலதா திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "நிறையும், குறையும் கலந்ததாக அதிமுக ஆட்சியை தேமுதிக பார்க்கிறது. வரும் பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் அணிதான் வெற்றிபெறும். எங்கள் தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது" என்றார்.