மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று உதகையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "தமிழக அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் பலன் கிடைத்திருக்கிறது.
பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில், சட்டம் தன் கடமையை செய்யும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். மலை மாவட்டங்தளில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுலாத் தலங்களை திறக்க வாய்ப்பில்லை.
நீலகிரி மாவட்டத்தில் அவசர மருத்துவத் தேவைக்காக ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க முயற்சி எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துகேட்ட பின்னர் முடிவு செய்யப்படும். நீலகிரியில் தேயிலைத் தூள் பரிசோதனை ஆய்வகம் திறக்கப்படும். இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சாந்தி அ.ராமு, மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கித் தலைவர் கப்பச்சி டி.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
7 பேர் விடுதலை..
இதைத் தொடர்ந்து திருப்பூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக பேசுவதற்கு, எந்தவித தார்மீக உரிமையும் திமுகவுக்கு கிடையாது. நளினி தவிர, மற்றவர்களின் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அப்போது, 7 பேரில் சிலருக்கு தூக்கு தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 7 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த நிலையில் இன்றைக்கு எதற்காக திமுக போராட்டம் நடத்துகிறது. இது யாரை ஏமாற்றும் வேலை. பேரறிவாளனுக்கு சட்டத்துக்கு உட்பட்டு இரண்டு முறை பரோல் வழங்கியது அதிமுகதான். 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென முழுமனதோடு, அதிமுக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 7 பேரின் விடுதலை தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் விஷயத்தில், மாற்றுத்திட்டம் என்பதே கிடையாது. நம் மாநிலத்துக்கு வரும் மின்சாரம்தான் இது. வேறு மாநில விவசாயிகள், நம்முடைய மாநிலத்துக்கு வரும் மின்சாரத்துக்காக நிலங்களை கொடுக்கிறார்கள். நம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, வேறு மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருகிறோம். இதனை விவசாயிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். மின்சாரம் இருந்தால்தான், விவசாயிகள் மற்றும் தொழில் இரண்டும் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.