கும்பகோணம் அருகே அம்மாச்சத்திரத்தில் கண்ணாடி கள் உடைத்து சேதப்படுத்தப்பட்ட அரசுப் பேருந்து. 
தமிழகம்

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களுடன் சென்றதாக 5 பேர் கைது: மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் என தகவல்

செய்திப்பிரிவு

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களுடன் சென்றதாக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியவன் என்கிற முருகன்(39). இவரையும் இவரது சகோதரி மகன் சக்திவேல்(26) என்பவரையும் கும்பகோணம் தாலுகா போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதேபோல, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் க.சுரேஷ்குமார்(48), அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா(47) ஆகியோரை பாபநாசம் போலீஸார் கைது செய்தனர். இதேபோல, பாமக முன்னாள் நகரச் செயலாளர் பாலகுரு(45) என்பவரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றதாக வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர். 5 பேரும் கும்பகோணம், பாபநாசம் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் முருகனை கைது செய்ததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் அரசுப் பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய மண்டல ஐ.ஜி. எச்.எம்.ஜெயராம் மேற்பார்வையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் 2-வது நாளாக நேற்றும் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும், மறைந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமாக இருந்து பல்வேறு வகையில் செயல்பட்டவர்கள் எனவும், இவர்களால் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாகவும் அதையடுத்தே, கட்சி மேலிடத்தின் உத்தரவின்படி துரைக்கண்ணுவின் ஆதரவாளர்களில் சிலரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT