தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க ஆர்டிஓக்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட பல நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பேருந்து, ரயில்களில் இடம் கிடைக்காதவர்களும், கடைசி நேரத்தில் பயணத்துக்கு திட்டமிடுபவர்களும் ஆம்னி பேருந்துகளில் செல்வார்கள். இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, சில ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு உயர்த்தி கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் ஆண்டுதோறும் புகார் கூறிவருகின்றனர்.
கரோனா தொற்றால் தற்போது வழக்கமான ரயில் சேவையும் இல்லாத நிலையில், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த சூழலில், ஆம்னி பேருந்துகளின் விதிமீறல்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ.கள் (வட்டார போக்குவரத்து அதிகாரிகள்) தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
விடுமுறை, பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது ஆண்டுதோறும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஆணையரக அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அபராதம் விதிக்கப்படும்
வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பது, பட்டாசு கொண்டு செல்வது, பேருந்துகளுக்கான ஆவணங்கள், ஓட்டுநர்களின் உரிமம் உள்ளிட்டவை தொடர்பாக சோதனை நடத்தப்படும். தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்பும், தீபாவளிக்கு பிறகும் ஆம்னிபேருந்துகளில் சோதனை நடத்துவோம். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பாதுகாப்பு குறைபாடு இருக்கும் வாகனங்களின் பர்மிட் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.