சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெடுக்க உள்ள குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் வரும் 23-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த ஆண்டு ரூ.85 ஆக இருந்த பருப்பு விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம்.
தேவையைவிட குறைவாகவே பருப்பு உற்பத்தியாகிறது. ஏற்கெனவே இருந்த தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தைகூட அரசு செயல்படுத்தவில்லை. ஆன்லைன் வர்த்தகத்தால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதானி குழுமத்தின் சூரிய மின் உற்பத்திக்காக கமுதி அருகே 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகி றது. விளைநிலங்களை பிற உபயோகத்துக்கு பயன்படுத்தி னால் உணவு உற்பத்தி மேலும் குறையும். இதில் அரசு தெளிவான கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.
தற்போது நாடு முழுவதும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவோ, மு.க.ஸ்டாலினோ எதுவும் கூறவில்லை. காங்கிரஸ், பா.ஜ. கட்சிகளுக்கு மாற்றாக திமுக, அதிமுக இல்லை.
உற்பத்தி பெருக்கம், வேலை வாய்ப்பு, புதிய தொழில்நுட்பங்கள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியாக இருக்குமே தவிர, முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் தொழில் வளர்ச்சியாக இருக் காது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உள்ள இட ஒதுக் கீட்டை ரத்து செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 72 ஜாதி ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல், லஞ்சம் நிலவுகிறது. இவற்றை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படாத நிலையில் அதே திட்டங்களை முதல்வர் மீண்டும் அறிவித்துள்ளார்.
தேர்தலில் கட்சிகள் பெறும் ஓட்டுகளை வைத்து கட்சிகளின் பலத்தைக் கூற முடியாது. டெல்டா பகுதி, கவுரவக் கொலை என மக்கள் பிரச்சினைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். உள்ளூர் உற்பத்தியை பாதிக்கும் வகையில் சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்யக்கூடாது என்றார்.