திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டிய கட்டிடம் திறப்புவிழா காணாத நிலையில், நேற்று பெய்த மழைக்கு ஊற்று போல் கட்டிடத்தின் சுவரிலிருந்து தண்ணீர் கொட்டியது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கத் திட்டமிட்டு ஓராண்டாக பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் 32 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய கடைகளை வாடகைக்கு விட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி யில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை திண்டுக்கல் நகரில் பெய்த கனமழையால் கடைகளின் மேற்பரப்பில் தண்ணீர் தேங்கியது. இதைத்தொடர்ந்து பக்கவாட்டுச் சுவரில் இருந்து நீரூற்றுபோல் தண்ணீர் கொட்டியது. பல இடங்களில் மேற்கூரையில் நீர்க் கசிவு ஏற்பட்டது. தரமற்ற கட்டுமானப் பணியே புதிய கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் கட்டிடத்திற்குள் வழிந்தோடக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூறுகையில், பழைய கட்டிடத்தை ஒட்டி புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தில் இருந்து வெளியான மழை நீர் புதிய கட்டிடத்தின் வழியே வெளியேறியதுதான் நீர் கசிவுக்குக் காரணம். இது சிறிய பிரச்சினைதான். இதைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.