பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழந்தது, அதனால் தான் திமுக வேட்பாளர் 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார் என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் இன்று (நவ.6) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றியச் செயலாளர் கோ.வி.சம்பத்குமார் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கி பேசியதாவது:
"தமிழகத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களும் மக்களை சென்றடைந்துள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி செய்கின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு ஒரு நாளும் பலிக்காது. தேர்தல் நேரங்களில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள். அதிலும் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்குவதில் முன்னணியில் உள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே அடுக்கடுக்காக பொய்யான வாக்குறுதிகளை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் நாம் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
அதிமுகவினர் முழு அளவில் தேர்தல் பணியாற்றியிருந்தால் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிப்பெற்றிருப்பார். எனவே, அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தேர்தல் பயம் வந்து விட்டது. அதனால், அதிமுக அரசின் திட்டங்களை தவறாக சித்தரித்துப் பொய்யான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர் என்பது அவருக்குத் தெரியவில்லை. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் அதிக உறுப்பினர்களை சேர்த்து அதிமுக வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.