ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3.25 கோடி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3.60 கோடி செலவில் மதுரை திருமலை நாயக்கர் மகால் வண்ணமயமாகியுள்ளது. வரும் 1-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குத் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவில் மாநகரான மதுரைக்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் இன்றைய நவீன அறிவியல் உலகம் நினைத்தாலும் கட்ட முடியாத திருமலை நாயக்கர் மகாலும் ஒன்று. எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள் வந்தாலும் அதில் அழியாமல், தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மதுரை திருமலை நாயக்கர் மகால் முக்கியமானது.
இத்தாலி நாட்டின் கட்டிடக்கலைப் பொறியாளரால் வடிவமைக்கப்பட்ட பிரமிக்கத்தக்க கட்டிடக் கலையையும், பார்ப்போரை ஈர்க்கும் வகையில் 58 அடி உயரம் உயர்ந்து நிற்கும் 248 தூண்களையும், கலை வேலைப்பாடுமிக்க மேற்கூரையும் கொண்டிருக்கும் திருமலை நாயக்கர் மகால், மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. பிரிட்டிஷார் ஆட்சியில் கடைசியாக 1860-ல் இந்த மகால் புதுப்பிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் தொடர்ச்சியாக சினிமா படங்களின் படப்பிடிப்பும் இந்த அரண்மனையில் நடத்தப்பட்டன. அவர்கள் தூண்களைச் சேதப்படுத்தியும், ஆணிகளை அறைந்தும் மகாலைச் சேதப்படுத்தியதால் தற்போது சினிமா படப்படிப்பிற்கு அனுமதியில்லை.
அரண்மனையைப் பராமரிக்கும் தொல்லியல் துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் மகால் பாழடைந்த கட்டிடம் போல் பொலிவிழந்து காணப்பட்டது. மழைக்காலத்தில் மழைநீரும் உள்ளே ஒழுகியது. அதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை பெருமளவில் குறைந்தது.
இந்நிலையில் அரண்மனை தற்போது சுற்றுலாத் துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் ரூ.3.60 கோடியில் அதன் பழமை மாறாமல் பராம்பரிய முறைப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழமை மாறாமல் மகாலின் பிரம்மாண்டத் தூண்களும், மேற்கூரையும் சீரமைக்கப்பட்டுள்ளன. மகாலின் வெளியே வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3.25 கோடியில் அழகுபடுத்தப்படுகிறது. புல்வெளிப் பூங்கா, அழகிய செடிகள், காபிள் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளன.
புல்வெளித் தரையின் நடுவில் செயற்கை நீரூற்று அமைத்துள்ளனர். வெயில், மழைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வளாகத்தில் பிரம்மாண்டக் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காகத் தனித்தனியாக இ- டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுதவிர, வழக்கமாக உள்ள கழிப்பறைகளும் மகால் வளாகத்தில் உள்ளன. பராமரிப்புப் பணிகளுக்காகப் பூட்டப்பட்டுள்ள மகாலை, டிசம்பர் 1-ம் தேதி அன்று சுற்றுலாவுக்காக மீண்டும் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.