பாஜகவினரைத் தடுத்து நிறுத்திய போலீஸார். 
தமிழகம்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தடையை மீறி ஊர்வலம்: பாஜகவினர் 220 பேர் கைது

கே.சுரேஷ்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய பாஜகவினர் 220 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

தமிழக பாஜக சார்பில் இன்று (நவ. 6) திருத்தணியில் தொடங்கி வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என, தமிழக அரசு தெரிவித்தது.

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரிப் பகுதியில் இருந்து இன்று (நவ. 6) ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தனர்.

இடையில், ரவுண்டானா பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அந்த இடத்தில், தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர். அப்போது, பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக பாஜகவினர் 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT