தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற நினைக்கிறதா அதிமுக?- வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணி

செய்திப்பிரிவு

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள நினைப்பதாலேயே வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜகவுடன் யாரும் கூட்டணி அமைக்க தயங்கிய காலத்தில், அதாவது 1998 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. வாஜ்பாயை பிரதமராக முன்னிறுத்திய அந்தக் கூட்டணிக்கு வெற்றியும் கிடைத்தது. முதன்முதலாக பாஜகவுக்கு தமிழகத்தில் 3 எம்.பி.க்கள் கிடைத்தனர். ஆனால், அந்தக் கூட்டணியும் வாஜ்பாய் ஆட்சியும் நீடிக்கவில்லை. 1999 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக இணைந்தது. அந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. 2001-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்த திமுக படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு பாஜகவுடன் கூட்டணி என்பதை திமுக நினைத்துப் பார்க்கவே இல்லை.

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜககூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும் புதுச்சேரி உட்பட 40தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அதன்பிறகு ஜெயலலிதா இருக்கும்வரை பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. மோடியுடன் நெருங்கிய நட்பு இருந்தாலும் 2014-ல் பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்கவில்லை. மாறாக 'மோடியா, லேடியா' என்று மோடிக்கு எதிராக தன்னை முன்னிறுத்தியே ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமைந்த அதிமுக -பாஜக கூட்டணி மிகப்பெரியதோல்வியைச் சந்தித்தது. அதேநேரத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9-ல் வென்று ஆட்சியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தேர்தல் தந்த பாடத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயங்குகிறது.

தயக்கத்தின் அறிகுறி

கடந்த சில மாதங்களாகவே அதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கிவிட்டது. விநாயகர் சதுர்த்தியின்போது பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட இந்து முன்னணி அனுமதி கேட்டது. முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் அனுமதிக்க மறுத்து விட்டார். அதேபோல, தற்போது எல்.முருகன் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. கூட்டணியில் இருந்து பாஜக தானாக வெளியே செல்லட்டும் என்பதற்காகவே அக்கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

வெற்றியை தருமா?

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அதிமுக - பாஜககூட்டணி என்பது 2004 தோல்வியோடு முடிந்து விட்டது. 2019-ல் வேறு வழியின்றி அக்கட்சியுடன் இணைய வேண்டியிருந்தது. அதுவும் படுதோல்வியில் முடிந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் அறவே கிடைக்காது. தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு என்பது ஆழமாக ஊன்றப்பட்டு விட்டது. இதனால், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தேர்தலில் வெற்றியைத் தராது என்பதே பெரும்பாலான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் கருத்தாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நீடிக்க மோடியின் ஆதரவும் ஒரு காரணம் என்பதால் பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. அதற்காக பாஜகவை நம்பி 2021 தேர்தலில் எங்களது அரசியல் எதிர்காலத்தை பலி கொடுக்க முடியாது’’ என்றார்.

தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘பாஜகவுடனான கூட்டணியை அதிமுக விரும்பவில்லை என்பதைதான் வேல் யாத்திரைக்கான அனுமதி மறுப்பு காட்டுகிறது. பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டால் சிறுபான்மையினர் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று அதிமுக நினைக்கலாம். ஆனால், எம்ஜிஆர் காலம்தொட்டே சிறுபான்மையினரில் ஒரு சிறு பகுதியினர்தான் அதிமுகவுக்கு வாக்களிக்கின்றனர். பெரும் பகுதியினர் திமுகவின் வாக்கு வங்கியாகவே உள்ளனர். எனவே, பாஜகவுடன் கூட்டணிஇல்லாவிட்டாலும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது. மாறாக பாஜகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் 5 சதவீத வாக்குகளையாவது அதிமுக இழக்கும். இது திமுகவுக்கு சாதகமாகவே அமையும். இதை அதிமுகவினர் உணர வேண்டும். அதிமுக, திமுகவுக்கு எதிராக 3-வது அணி அமைக்கும் திட்டமும் பாஜகவிடம் உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT