தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் கடந்த 4-ம் தேதி நடந்தது. ஆவின் புதிய இனிப்பு வகைளை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆவின் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் ரூ.26.87 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குநர் முதல் கீழ்நிலை பணியாளர்கள் வரையிலான அனைவருமே இதற்கு காரணம்.
ஆவின் சார்பில் இந்த ஆண்டு, ஸ்டஃப்டு டிரை ஜாமூன், நட்டி மில்க் கேக், ஸ்டஃப்டு மோதி பாக், காஜு பிஸ்தா ரோல், காபி மில்க் பர்பி என 5 விதமான இனிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த 5 விதமான இனிப்புகளும் அடங்கிய காம்போ பேக் அரை கிலோ ரூ.375-க்கு விற்கப்படுகிறது. தற்போது ஆவின் நெய் முறுக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 80 டன் ஆவின் இனிப்பு விற்கப்பட்டது. இந்த ஆண்டு 100 டன் இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தற்போது கலப்படம் இல்லாத பால் என்றால் அது ஆவின் பால்தான். கரோனா காலத்தில் தினமும் 41 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்தது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குநர் மா.வள்ளலார், நிர்வாக இணை இயக்குநர்மணிவண்ணன், பொது மேலாளர்கள் பொற்கொடி (நிர்வாகம்), ரமேஷ்குமார் (விற்பனை), துணை பொது மேலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.