தமிழகம்

தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முடிவு: அதிமுக அரசைக் கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தடையை மீறி வேல் யாத்திரை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ள அதிமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

நவம்பர் 6 ம் தேதி திருத்தணியில் தொடங்கி. டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூர வரை வெற்றிவேல் யாத்திரை நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “வேல் யாத்திரை அனுமதி கிடைக்காதது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக மங்களூரில் இருந்து தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி அவசரமாக வந்து கலந்து கொண்டார். தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்குவது என்றும், யாத்திரைக்கு தடை விதித்த அதிமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவித்தனர்.

‘துள்ளி வருகுது வேல்'

கூட்டம் முடிந்து வெளியே வந்த எல்.முருகனிடம், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “துள்ளி வருது வேல். இதற்கு என்ன பொருள் என்று அனைவருக்கும் தெரியும். இந்து கடவுளுக்கு, தமிழ் கடவுளுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் பண்பாட்டுக்கு ஒரு தீங்கு என்றால் அதனைப் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம்" என்றார்.

வேல் யாத்திரைக்கான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, “மக்கள் மன்றத்தை அணுகுவோம்" என்று முருகன் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT