தமிழகம்

வடமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்டு பதுக்கல்: திருப்பூரில் 3,456 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - நள்ளிரவில் தப்பிச்செல்ல முயன்ற கும்பலை விரட்டி பிடித்த போலீஸார்

செய்திப்பிரிவு

வடமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்டு திருப்பூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.22 லட்சம் மதிப்பிலான 3,456 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, தனிப்படை போலீஸார் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர். முன்னதாக, சரக்கு வேனில் புகையிலை பொருட்களுடன் தப்பிச்செல்ல முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை விரட்டிப் பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே வளையபாளையம் வண்ணாந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சந்தேகத்துக்குரியவர் நடமாட்டம்இருப்பதாக, மங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக கண்காணித்து வந்த தனிப் பிரிவு போலீஸார், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதும், கடந்த 4-ம் தேதி இரவு வெளியூரிலிருந்து அதிக அளவில் புகையிலை பொருட்கள் கொண்டுவரப்படவுள்ளதையும் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவின்பேரிலும், காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.சி.ராமச்சந்திரன் மேற்பார்வையிலும், மங்கலம் காவல் ஆய்வாளர்நீலாதேவி தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள், நேற்று முன்தினம் இரவு முதல் அங்கு பதுங்கியிருந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் சரக்கு வேன்கள், கார் உள்ளிட்டவை குடோனுக்கு வந்துள்ளன. சுமார்ஒரு மணி நேரம் கழித்து போலீஸார் கண்காணிப்பதை அறிந்து, அங்கிருந்தவர்கள் சரக்கு வேன்களுடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். வளையபாளையத்திலிருந்து 63-வேலம்பாளையம் சாலையில் போலீஸார் விரட்டிச் சென்று அவர்களை பிடித்தனர்.

அவர்களை குடோனுக்கு அழைத்து வந்து ஆய்வு செய்தபோது, அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் வாகனங்களில் இருந்தது,குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது என மொத்தமாக 7 பெயர் வகைகளில் தயாரிக்கப்படும் 3,456 கிலோ புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பல்லடம் மாணிக்காபுரம் சாலை கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்த எஸ்.அரவிந்த்ராஜ் (24), வடுகபாளையம் சென்னூரை சேர்ந்தஜே.வைகுண்டராமன் (38), பொல்லிகாளிபாளையம் தாராபுரம் சாலையைச் சேர்ந்த பி.முத்து கிருஷ்ணன் (35), கோவை சுந்தராபுரம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த எஸ்.சஜி பிரசாத் (43) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

கோட்பா சட்டம் மற்றும் கேடு விளைவிக்கும் பொருளை விற்பனைக்கு வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 பேரும்கைது செய்யப்பட்டனர். 2 சரக்கு வேன்களும், ஒரு காரும் கூடுதலாக பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்புரூ.22 லட்சம். புகையிலை பொருட்களை வடமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்து வந்துள்ளனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் மற்றும் பின்புலம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"என்றனர்.

SCROLL FOR NEXT