கார்த்திகேய சேனாபதி 
தமிழகம்

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி திமுகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

‘சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் செயலாளருமான கார்த்திகேய சேனாபதி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று வந்தார். அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை ஸ்டாலின் வழங்கினார்.

காளைகள் வளர்ப்பு, ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவரான கார்த்திகேய சேனாபதி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.

அமமுக நிர்வாகி

புதுக்கோட்டை மாவட்ட அமமுகஇளைஞரணித் தலைவர் ஏ.இளங்கோ தலைமையில் ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் சி.சின்னப்பா, கறம்பக்குடி எம்ஜிஆர் மன்றத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் முத்துக்குமார், முன்னாள் எம்எல்ஏ தஞ்சை எஸ்.நடராஜனின் பேரனும், கல்லீரல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் எம்.கார்த்திக் ராஜ் ஆகியோரும் நேற்று திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது திமுக துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், செய்தி தொடர்புச் செயலாளர் பி.டி.அரசகுமார், என்.ஆர்.இளங்கோ எம்பி உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT