ஊரகப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க ரூ.224 கோடியே57 லட்சம் செலவில் 72 லட்சம்மரக்கன்று நடும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
பருவ மழையை எதிர்கொள்ள தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குடிமராமத்து திட்டத்தின்கீழ் இந்தநிதியாண்டில் இதுவரை தூர்வாரப்படாத ஏரிகள், குளங்களை புனரமைப்பதுடன், வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும்.
மரக்கன்றுகள் நடுதல்
ஊரகப் பகுதிகளை பசுமையாக்கவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்தவும், காலியாக உள்ள அரசு நிலங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுப் பூங்காக்கள் மற்றும் இதர இடங்களில் ரூ.224 கோடியே 57 லட்சம் செலவில் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 11 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகளை விரைவாக நடவு செய்ய வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் ரூ.14 கோடியே 8 லட்சத்தில் 100 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள், ரூ.5 கோடியே 43 லட்சத்தில் 100 கதிர் அடிக்கும் களங்கள், ரூ.41 கோடியே 3 லட்சம் மதிப்பில் 100 கிராம சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன.
முதல்வரின், சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில், இந்த ஆண்டில் 20 ஆயிரம் வீடுகளில் 12 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பசுமை வீடு திட்டத்தின்கீழ் 20 ஆயிரம் வீடுகளில், 12 ஆயிரம் வீடுகளுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின், குடியிருப்பு திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்பட்டு, 74 ஆயிரம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் சாலைப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.