பாஜகவின், ‘வேல் யாத்திரை’க்கு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், திருத்தணியில் யாத்திரையின் தொடக்க விழாவுக்கு பந்தல் போட முயன்றதை தடுத்த போலீஸாரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இன்று (நவ.6) முதல் டிச.6-ம் தேதிவரை, திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவுபெறும் வகையில், ‘வேல் யாத்திரை’ நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் ஏற்கெனவே அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்குகளை நேற்று விசாரித்தது. அப்போது, ‘‘கரோனா வைரஸ் 2-வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது’’ என்றுதமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடைகேட்ட 2 வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை, திருத்தணி, சென்னை பழைய பை-பாஸ் சாலையில் வேல் யாத்திரை தொடக்க விழாவுக்கு பந்தல் அமைக்க முயன்றனர். அப்போது, திருத்தணி டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் அங்கு வந்த போலீஸார், பந்தல் போடுவதை தடுத்து நிறுத்தினர்.
இதனால், போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘வேல் யாத்திரைக்கு அனுமதியில்லாத நிலையில், விழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய அனுமதிக்க முடியாது’’ எனபோலீஸார் கூறினர்.
இதையடுத்து,அவர்கள் தமிழக அரசுக்கும் போலீஸாருக்கும் எதிராக முழக்கமிட்டுவிட்டு, அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.