சேலம் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை சராசரியை விட கூடுதலாக பெய்தும் கூட, மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள் வறண்டுள்ளன. எனவே, குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்பட்ட ஏரிகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை கடந்த வாரம் நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை சராசரி 440.60 மிமீ இருக்கும். நிகழாண்டில் 597.40 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 156.80 மிமீ கூடுதலாகும்.
மாவட்டத்தில் மழை மறைவுப் பிரதேசம் என கூறப்படும் ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டு கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூடுதல் மழை பெய்தது.
மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான சரபங்கா நதி, வசிஷ்ட நதி, ஸ்வேத நதி ஆகியவற்றில் ஓரளவு நீர்வரத்து இருந்தது. ஆனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏரிகள் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளன.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. எனினும், தென்மேற்குப் பருவமழை மூலம் காமலாபுரம் பெரிய ஏரி, கன்னங்குறிச்சி ஏரி, ஆத்தூர் புது ஏரி, அம்மம்பாளையம் முட்டல் ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
ஏரிகள் நிரம்பாததற்குக் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளையால் ஆறுகளின் இயல்பான நீரோட்டம் தடைபட்டிருப்பது போன்றவை முக்கிய காரணங்களாகும். மேலும், ஏரிகளுக்கான நீர்வரத்துக் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாதது, ஏரிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றாதது போன்றவை முக்கிய பிரச்சினையாக உள்ளன.
மாவட்டத்தில் சில ஏரிகளில் குடிமராமத்துப் பணி நடைபெற்றாலும் கூட, அங்கு ஏரி கரைகளை சீர்படுத்துவது, சீமைக்கருவேல மரங்களை அகற்றவது உள்ளிட்ட முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, ஏரிகளில் இருந்து வணிக நோக்கத்தில் மண் எடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக் குடிமராமத்து நடைபெற்றுள்ள ஏரிகளில் அந்தந்த வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், வட கிழக்குப் பருவமழைக் காலத்திலாவது, அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்பும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.