தமிழகம்

234 தொகுதிகளிலும் தேர்தல் ஆயத்த மாநாடு: விரைவில் நடத்தி முடிக்க பாஜக தீவிரம்

குள.சண்முகசுந்தரம்

சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் ஆயத்த மாநாடுகளை விரைவில் நடத்த பாஜக தயாராகி வருகிறது.

பாஜக சார்பில் 234 தொகுதிகளிலும் தேர்தல் ஆயத்த மாநாடுகளை நடத்துவதற்காக பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, மதுரை பெருங்கோட்டத்துக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், சென்னை, திருச்சி, கோவைக்கு முறையே மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை டால்ஃபின் சேகர், தஞ்சை ரத்தினசபாபதி, கோவை பாலகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய மதுரை பெருங்கோட்ட தொகுதிகள் மாநாட்டு பொறுப்பாளர் முரளிதரன், ’’நாடாளுமன்றத் தேர்தலில், கட்சியும் கட்சித் தொண்டர்களும் தீவிரமாய் களப்பணி செய்தபோதும் பாஜக அபிமானிகளை ஒருங்கிணைக்கத் தவறி விட்டோம். சட்டமன்றத் தேர்தலில் அதை சரிசெய்வதற்காகத்தான் தொகுதி மாநாடுகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள் மூன்றாக தரம் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ ப்ளஸ் தொகுதிகள் பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள். பி ப்ளஸ் தொகுதிகளில் முட்டி மோதினால் இரண்டாம் இடத்தைப் பிடிக்க முடியும். பாஜக-வுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லாத தொகுதிகள் சி ப்ளஸ் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் தீவிர களப்பணி செய்து கட்சியைப் பலப்படுத்துவோம்.

தென் மண்டலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் 16 தொகுதிகள் ஏ ப்ளஸ் பட்டியலில் உள்ளன. பிஹார் தேர்தலுக்குப் பிறகு இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2017-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் பாஜக தனி பெரும்பான்மைக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்தியாவை வளமாக்கும் மோடியின் கனவுத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது தலைமையின் கணிப்பு. தொகுதி மாநாடுகளை நடத்தும் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 29-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அடுத்த கட்ட மாக அக்டோபர் 6 முதல் 8 வரை மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. 16-ம் தேதி, தொகுதி மாநாடுகளுக்கான தேதிகள் இறுதி செய்யப்படும். தீபாவளிக்குள் 234 தொகுதிகளிலும் மாநாடுகளை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இதனிடையே, சட்டமன்றத் தேர்தலுக்காக பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளும் பாஜக தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பூத் கமிட்டிகளை வழிநடத்த கிளை மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களும் பூத் கமிட்டி பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT