மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குக் கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று வரை டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், மேட்டூர் கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அணையின் நீர் மட்டம் நேற்று 97.28 அடியாகவும், நீர் இருப்பு 61.37 டிஎம்சி-யாகவும் இருந்தது. நீர் வரத்து விநாடிக்கு 5,220 கனஅடியாக இருந்தது.
இதனிடையே, டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் காவிரி நீர் போதிய அளவு கிடைக்காமல், நெற்பயிர்கள் கருகி வருவதாகக் கூறி அங்குள்ள விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
இந்த சூழலில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு இன்று மாலை 6 மணி முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் நேற்று காலை 96.37 அடியாகவும், நீர் இருப்பு 60.23 டிஎம்சி-யாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு 5,997 கனஅடியாகவும் இருந்தது. மேட்டூர் கால்வாய்ப் பாசனத்துக்கான நீர்த் திறப்பு விநாடிக்கு 900 கனஅடியாக நீடிக்கிறது.