தமிழகம்

தமிழகத்தில் ஆட்சியையும், எதிர்க்கட்சியையும் நடத்துவது திமுக தான்: தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

ரெ.ஜாய்சன்

தமிழகத்தில் ஆட்சியையும், எதிர்க்கட்சியையும் நடத்துவது திமுக தான் என தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்து கனிமொழி எம்.பி., பேசியதாவது:

”இயற்கை ஒரு பெரிய சவாலை உலகத்தை நோக்கி வீசிவுள்ளது. அதனைத் தாண்டி இங்கு கொள்கை ரீதியாக சவால்கள் வீசப்படுகிறது. நமக்கு உரிமைகளை மறுத்து சவால்கள் வீசப்படுகின்றன. இயற்கை சவாலாக இருந்தாலும், உரிமை மறுப்பு சவாலாக இருந்தாலும், அத்தனையும் வென்று நிற்கும் இயக்கம் திமுக

இங்கு ஒரு ஆட்சி நடக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பையும் திமுக தலைவரே எடுத்து நடத்த வேண்டிய நிலை உள்ளது.

ஏனென்றால் ஜிஎஸ்டி வரி வசூலித்து விட்டது. அதனை வேறு செலவுகளுக்கு எடுத்து செலவு செய்து விட்டதாக மத்திய தணிக்கைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்பிறகும், உரிமைக்காக அதிமுக அரசு குரல் எழுப்பவில்லை.

அதற்கு குரல் எழுப்பும் ஒரே தலைவர் திமுக தலைவர் தான். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் ஆளுநரை வலியுறுத்தாமல் அமைதியாக இருந்தார்கள்.

திமுக போராட்டம் நடத்திய பிறகே ஆளுநர் கையெழுத்து போட்டார். தமிழக அரசுக்கு வர வேண்டிய உரிமைகளை கூட மீட்டெடுக்க போராட வேண்டிய இயக்கமாக திமுக உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை பற்றி கூட கவலைப்படாமல் பள்ளிக்கூடங்களை திறக்க அரசு முடிவு செய்தது. ஆனால் தவறு நடக்காமல் தடுக்க வேண்டும் என்ற முன்னெடுப்பை திமுக எடுத்துள்ளது.

ஆகையால் இங்கு ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பதும், எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதும் திமுகதான். ஆகையால் தமிழகத்தை இவர்களிடம் இருந்து மீட்டெடுத்து, நாமே பணியாற்றுவோம் என்ற நிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் அறிவுறுத்தினார். இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. அதனை அதிமுக அரசு தட்டிக் கேட்கவில்லை. மாநில உரிமைகளை, மொழி உரிமைகளை, அடையாளங்களை மத்திய அரசிடம் அடகு வைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்கள் செய்யும் தவறை தொடர்ந்து செய்ய, மத்திய அரசு கவசமாக உள்ளது. இந்த கூட்டணியை உடைத்தெடுத்து தமிழகத்தை மீட்டெடுப்போம்” என்றார் கனிமொழி.

SCROLL FOR NEXT