கள்ளக்குறிச்சி அருகே நேற்று முன் தினம் மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் இடி தாக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அசக்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது நிலத்தில் நேற்று முன்தினம் மாலையில் இவரது மனைவி இந்திராகாந்தி (45), மகன் வெங்கடேசன் (22), இந்திராகாந்தியின் தாயார் பூவாயி (62) ஆகிய 3 பேரும் பருத்தி விதையை நிலத்தில் ஊன்றும் வேலை பார்த்து கொண்டிருந்தனர். வயல் வேலைக்கு சென்ற அவர் கள், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில், நேற்று காலை வயல்வெளிக்கு சென்று அவர்களது உறவினர்கள் பார்த்த போது மூன்று பேரும் நிலத்தில் இறந்து கிடந்தனர். நேற்று முன் தினம் மாலை மற்றும் இரவில் அந்த கிராமத்தில் இடி மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. எனவே, வயலில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேரும் இடி தாக்கியதில் உயிரிழந்து இருக் கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வரஞ்சரம் போலீஸார் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர்கள் இடிதாக்கி உயிரிழந்தது உறுதி யாகும் என போலீஸார் தெரி வித்தனர்.
அதிகமழை
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று வரை பலத்த மழை பெய்தது. மழை அளவு குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை வரை உளுந்தூர்பேட்டையில் 29 மி.மீ., சங்கராபுரத்தில் 5 மி.மீ., கள்ளக்குறிச்சியில் 11 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.