அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 125 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 125 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (நவ. 5) கூறியதாவது:

"புதுச்சேரியில் 4,110 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-98, காரைக்கால்-9, ஏனாம்-9, மாஹே-9 என மொத்தம் 125 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆனந்தா நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 598 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35 ஆயிரத்து 550 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வீடுகளில் புதுச்சேரியில் 1,055 பேர், காரைக்காலில் 140 பேர், ஏனாமில் 53 பேர், மாஹேவில் 55 பேர் என 1,303 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோல், புதுச்சேரியில் 347 பேர், காரைக்காலில் 50 பேர், ஏனாமில் 51 பேர், மாஹேவில் 78 பேர் என 526 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 1,829 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் 420 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 123 (93.17 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்து 632 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 377 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

புதுச்சேரியில் 32 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமல் உள்ளனர். 48 சதவீதம் பேர் முழுமையாக முகக்கவசம் அணிகின்றனர். 20 சதவீதம் பேர் சரியான முறையில் முகக்கவசம் அணிவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்கள் நூறு சதவீதம் முகக்கவசத்தை முழுமையாக அணியாவிட்டால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கரோனா பரவாது என்று சுகாதாரத்துறையும், பொதுமக்களும் நினைக்கக் கூடாது. தற்போது சுகாதாரத்துறை முழுமையாகக் கரோனா பணியை மேற்கொண்டு வருகிறது.

ஆகவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வதைக் கடைப்பிடித்தால், கரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT