தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் மதுரை மாவட்டம், மதுரை, டாக்டர் தங்கராஜ் சாலையில் அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துயிற்கூடங்கள், சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
குழந்தை நலக்குழுக்கள் வழியாக இளைஞர் நீதி அமைப்பின் கீழ்வரும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை அரசு குழந்தை இல்லங்களில் அனுமதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு, நீண்டகாலப் பராமரிப்பு, பிரச்சினைகளுக்கான தீர்வு, கல்வி, பயிற்சி, மேம்பாடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் பழனிசாமி 13.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், "ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986 ஆம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. தற்போது இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டிடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சி கூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை கட்டப்படும்" என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை மாவட்டம், மதுரை, டாக்டர் தங்கராஜ் சாலையில் 2,210 சதுர மீட்டர் பரப்பளவில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 குழந்தைகள் தங்கிப் பயனடையும் வகையில் துயிற்கூடங்கள், சமையலறை, உணவுக்கூடம், வகுப்பறைகள், கண்காணிப்பாளர் அறை, அலுவலக அறைகள், பணியாளர் அறைகள் மற்றும் ஆலோசனை / ஆற்றுப்படுத்தும் அறை உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தின் புதிய கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
முதல்வர் பழனிசாமி 4.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், நொளம்பூரில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
மக்களைத் தேடி அரசு எனும் சீரிய கோட்பாட்டின்படி, அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாகக் கொண்டு சென்று, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடங்கள் கட்டுதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 13.12.2013 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மதுரவாயல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், நொளம்பூரில், 2 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு அரசின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்’’.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.