வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் அதிமுகவினர் முனைப்புடன் ஈடுபடுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வரைவு வாக்காளர் பட்டியல்வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றுமுதல் டிச.15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம்செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 21, 22, டிச.12, 13 ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் அதிமுக தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள், வாக்குச்சாவடி முகவர்களும் தனி கவனம் செலுத்த வேண்டும்.
18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்கள், புதிதாக குடிவந்துள்ளவர்கள் ஆகியோரது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், வெளியூருக்கு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குதல், பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்தல் போன்ற பணிகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.
இப்பணிகளில் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாக தெரியவந்தால், தேர்தல் அதிகாரியிடம் உடனுக்குடன் புகார்அளித்து தீர்வு காண வேண்டும். அதிமுக சார்பில் முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகளில் உடனடியாக முகவர்களை நியமித்து, இதை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிகளை முனைப்புடன் செய்து முடித்து அந்த விவரங்களை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.