கருணாநிதியே அழைத்தாலும் இனி திமுகவுக்கு செல்லமாட்டேன் என்று இலட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நான் அடுத்த முதல்வர் ஆகவேண்டும் என்று அபத்தமான கற்பனைகள் செய்ததுமில்லை, அமைச்சராக வேண்டுமென்று ஆசை கொண்டு அலைந்ததுமில்லை. நான் ஒன்றும் உலகளாவிய பேச்சாளன் அல்ல. ஓரளவுக்கு பேசத் தெரிந்தவன் என்று பெயர் வாங்கி இருக்கிறேன். என் பேச்சுத் திறமையையும் பிரச்சார பலத்தையும் அதிகமாக பயன்படுத்திக்கொண்டு கறிவேப்பிலையாக என்னைத் தூக்கி எறிந்தவர்களும் உண்டு, காரியம் முடிந்ததும் கை கழுவியவர்களும் உண்டு.
நாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலட்சிய திமுகவை பலப்படுத்த நவம்பர் மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.
நடிகர் சங்கத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போட்டியிடக்கூடாது என்ற நிலைபாட்டை அக்கட்சி எடுத்துள்ளது. அதேபோலத்தான் இலட்சிய திமுகவும் நடுநிலை வகிக்கிறது. சிலம்பரசன் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்பது அவர் விருப்பம். என் வழி தனி, அவர் வழி தனி.
திமுகவின் பிரச்சார பலத்தை அதிகப்படுத்த கருணாநிதி என்னை ஒரு காலகட்டத்தில் அழைத்தார். குரு அழைத்தாரே என்று சிஷ்யனாக சென்றேன். அவருடைய உடன்பிறப்புகளே அங்கு அவரது பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி கருணாநிதியே அழைத்தாலும் திமுகவுக்கு செல்ல மாட்டேன்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.