ஆபத்தில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்முக பாறு கழுகு கோவை பேரூரை அடுத்த தீத்திபாளையம் பகுதியில் தென்பட்டுள்ளது, பறவை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஒட்டிய சிறுமுகை, நீலகிரி மாயாறு பள்ளத்தாக்குப் பகுதிகளில் பாறு கழுகுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற வனப்பகுதிகளில் பாறு கழுகளைக் காண்பது என்பது அரிதினும் அரிதான நிகழ்வு. இந்நிலையில், கோவை பேரூரை அடுத்த தீத்திபாளையம் அய்யாசாமி மலைக்கோயில் பகுதியில் கோவை இயற்கை அமைப்பின் (சி.என்.எஸ்) உறுப்பினரான சீனிவாச ராவ் செம்முக பாறு கழுகை (Red-headed vulture) இரு தினங்களுக்கு முன் படம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "வழக்கமான பறவை நோக்குதலுக்காக அப்பகுதிக்குச் சென்று பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, வானத்தில் பெரிய கழுகு ஒன்று பறந்து சென்றதை எதேச்சையாகப் படம் பிடித்தேன். அது பாறு கழுகு என்பது படம் பிடிக்கும்போது தெரியவில்லை. பின்னர், அந்தப் படத்தை மற்ற பறவை ஆர்வலர்களிடையே பகிர்ந்து கேட்டபோது, பதிவு செய்யப்பட்டது அரிதினும் அரிதாகத் தென்படும் செம்முக பாறு கழுகு என்பது தெரியவந்தது" என்றார்.
கோவையில் உள்ள பறவை ஆர்வலர்களிடம் உள்ள அண்மைக்கால பதிவுகளின்படி மோயாறு பள்ளத்தாக்கை ஒட்டிய சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளைத் தவிர்த்து வேறு எங்கும் செம்முக பாறு கழுகுகள் பதிவு செய்யப்படவில்லை. இந்தவகை கழுகுகள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அழிந்துவரும் மற்றும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள் அடங்கிய சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து, சிஎன்எஸ் மூத்த உறுப்பினர் ஜி.பிரகாஷ் கூறும்போது, "செம்முக பாறு கழுகு தனது வழக்கமான வாழிடப் பரப்பைத் தாண்டி வந்துள்ளது. உணவுத் தேவைக்காக இந்த இடம்பெயர்வு இருக்கலாம் எனக் கருதுகிறோம். அவ்வாறு இடம்பெயர்ந்து வரும்போது அதற்குத் தேவையான உணவு கிடைத்தால், அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உயரமான நீர் மத்தி மரங்களில்தான் பாறு குழுகள் பொதுவாகக் கூடுவைத்து குஞ்சு பொறிக்கின்றன. சிறுவாணி மலைப்பகுதியிலும் இந்த மரங்கள் உள்ளன. எனவே, அந்த இடத்தை நோக்கி இந்தக் கழுகு சென்று இருக்கலாம்" என்றார்.