சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசனநீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
அதேபோல் பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.
இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவித்ததை அடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.
அதைதொடர்ந்து அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் முன்னிலையில் விவசாயிகள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால் முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தேவர், ஒருங்கிணைப்பாளர் அன்வர், திமுக ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், காங்கிரஸ் மாநில மகளிரணி நிர்வாகி ஸ்ரீவித்யாகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தண்ணீரை திறக்காத அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.