பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 108 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 108 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (நவ. 4) கூறும்போது, "புதுச்சேரியில் 3,819 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-82, காரைக்கால்-13, ஏனாம்-1, மாஹே-12 என மொத்தம் 108 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், ஏனாமைச் சேர்ந்த 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 597 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.69 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35 ஆயிரத்து 429 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,267 பேர், காரைக்காலில் 131 பேர், ஏனாமில் 47 பேர், மாஹேவில் 55 பேர் என 1,500 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், புதுச்சேரியில் 445 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 55 பேர், மாஹேவில் 78 பேர் என 629 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 2,129 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் 419 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 703 (91.31 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 813 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 776 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT