குளிர்காலத்தில் கிருமிகள் தாக்கும் அபாயம் இருப்பதால், கல்வி நிறுவனங்களைத் திறக்க வேண்டாம் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 4) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா கொடுந்தொற்று பரவுதல் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது என்பது நம் மக்களின் கவலையைப் போக்கக்கூடிய நற்செய்தி என்றாலுங்கூட, அதனால் ஏதோ அது முற்றாக முடிந்துவிட்ட அபாயம் என்பது போன்ற தவறான கணக்கு நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.
பல நாடுகளில் முதல் சுற்று முடிந்து நிம்மதிப் பெருமூச்சு அடங்கும் முன்னரே, மீண்டும் 2 ஆவது அலை என்பது அதன், கரோனாவின் கோர முகத்தைக் காட்டத் தவறவில்லை என்பதை மறக்கக் கூடாது!
வரும் காலம் மழை - குளிர்காலப் பருவம்!
அதிலும், நம் நாட்டைப் பொறுத்தவரை, வருவது மழை பெய்யும் குளிர்காலப் பருவம் ஆகும். இப்பருவத்தில், நோய்க் கிருமிகள் இயல்பாகவே, சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவது வழமையும், வாடிக்கையும் ஆகும்; இதோடு இந்தக் கரோனா கொடுந்தொற்று வைரஸ் கிருமிகளும் நமது உடலைத் தாக்கினால், அதன் கொடுமை தாங்கொணாத ஒன்றாகிவிடும்.
நமது உடல் உறுப்புகளும், அதன் நோய் எதிர்ப்புச் சக்தியை இந்தக் குளிர்காலப் பருவத்தில் எந்த அளவுக்கு மற்ற பருவங்களில் உள்ளதைப் போல தாங்கும் அல்லது கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தியைப் பெற முடியாத அளவுக்கு வாய்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், இந்தக் காலகட்டத்தில் யாரும் அலட்சியம் காட்டக் கூடாது.
முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும். 6 அடி தள்ளி நின்று பேச வைப்பதும் அவசியமானதாகும். அடிக்கடி சோப்புப் போட்டு கை கழுவுவது, கிருமி நாசினிகளைத் தவறாமல் உபயோகிப்பது, உடல்நலத்தைக் காக்க, நோய் எதிர்ப்புச் சக்தியைக் காக்க முன்பைவிட கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு, மறக்க வேண்டாம்!
நவ.16இல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு அறிவிப்பு - அபாய அறிவிப்பாகும்!
இவ்வளவும் கூறும் நமது அரசுகள், மத்திய - மாநில அரசுகள் - கல்விச் சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை இம்மாதம் திறப்பது என்று அறிவித்திருப்பது அதிர்ச்சி தரக்கூடிய அபாய அறிவிப்பாகும்!
ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரைக் கரோனா தொற்றிலிருந்து மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தக் கட்டத்தில், ஏதோ நிலைமை சீரடைந்துவிட்டதுபோல எண்ணிக்கொண்டு, பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் இயங்கலாம் என்று கூறியுள்ளதை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, தள்ளிப் போட வேண்டும்.
தமிழகப் பெற்றோர்கள் மிகுந்த கவலையும், வேதனையும், மன அழுத்தத்தையும் இதனால் பெற்றுத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் உயிருடன் விளையாடக் கூடாது; 'சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும்' என்ற பழமொழி ஆட்சியாளர்கள் அறியாததா?
மக்களின் விரும்பத்தகாத முடிவு
மாணவர்கள் உயிரும், நல வாழ்வும், அதுபோல் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாற்றுவோர் உள்பட அனைவரது உடல்நல, உயிர்ப் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் அல்லவா? குளிர்காலமான இந்த மழைக் காலத்தில் இப்படி ஒரு முடிவு மக்களின் விரும்பத்தகாத முடிவாகும்!
எனவே, மறுபரிசீலனை செய்து பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிப் போடும் அறிவிப்பை முதல்வர் அறிவித்தல் மனிதநேய அடிப்படையில் மிகவும் முக்கியமானதாகும்!
அதுபோலவே, பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் போவதும், பிறகு அபராதம் கட்டுவதும் தற்கொலை முயற்சி மட்டுமல்ல; மிகப்பெரிய சமூக ஒழுங்கீனமும் ஆகும்!
தமிழ்நாட்டில் இதுவரை நாம் 11 ஆயிரத்து 214 உயிர்களை, உறவுகளை இழந்துள்ளோம். இந்திய அளவில், 1 லட்சத்து 23 ஆயிரத்து 611 உயிர்களையும், உலக அளவில் 12 லட்சத்து 19 ஆயிரத்து 619 உயிர்களையும் இழந்துள்ளோம் என்பதால், அந்தத் துயரமும், துன்பமும் மறைவதற்கே காலம் பிடிக்கும் என்ற நிலையில், வாழுபவர்கள் அலட்சியத்துடன் இல்லாமல், அரசுகள், காவல்துறை, மருத்துவத் துறையினர் கூறுவது நமது நலத்துக்காக, நமது பாதுகாப்புக்காக என்ற உணர்வை மறக்காமல் மனதில் நிலைநிறுத்திக் கரோனா தொற்றை எதிர்கொண்டு விழிப்புடன் வாழ்வது இன்றியமையாக் கடமையாகும்!
கட்டுப்பாடு காத்த வாழக்கையே வெற்றிகரமான வாழ்க்கை
தீ என்று தெரிந்தும் எவராது கையை விட்டுப் பரிசோதிப்பார்களா? அதுபோன்று எந்த முயற்சியும் வேண்டாம், கட்டுப்பாடு காத்த வாழக்கையே வெற்றிகரமான வாழ்க்கையாகும்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.