தமிழகம்

தமிழ்க் கடவுளுக்கு வேல் யாத்திரை நடத்தும் பாஜக; தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா?-கனிமொழி கேள்வி

செய்திப்பிரிவு

தமிழ்க் கடவுள் முருகனுக்கு வேல் யாத்திரை நடத்தும் பாஜகவினர், தமிழ் மொழியைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைப்பார்களா? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைவர் முருகன் தலைமையில் நவ.6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்கி, வாக்குகளாக மாற்ற பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

மற்றொரு புறம், பாஜகவினரின் வேல் யாத்திரையால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் எனச் சிலர் புகார் அளித்துள்ளனர். வேல் யாத்திரைக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் 2 பேர் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவ்வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளன.

இந்நிலையில் வேல் யாத்திரை குறித்து திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்க் கடவுள் முருகனுக்கு வேல் யாத்திரை செல்லும் பாஜகவினர் தமிழைத் தேசிய மொழியாக அங்கீகரிக்க கோரிக்கை வைப்பார்களா எனக் கேட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?”

இவ்வாறு கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT